இந்தியாவின் ஜி-20 அமைப்பின் பிரதிநிதியான ஷெர்பா அமிதாப் காந்த் இந்தோனேசியாவின் ஜனாதிபதியின் ஜி-20அமைப்பின் தலைமைத்துவத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் கூட்டத்தொடரில் இந்தியப் பிரதிநிதி அமிதாப் காந்த் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, அமிதாப் காந்த் இந்தியாவின் சாதனைகள் மற்றும் அனுபவங்களை கோடிட்டுக் காட்டியதோடு, உலகளாவிய சவால்களை உள்ளடக்கிய, முன்னோக்கு மற்றும் ஒத்துழைப்புடன் எதிர்கொள்ளவதற்கு ஏனைய அங்கத்தவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தோனேசியாவின் ஜனாதிபதி வகித்துவருவதோடு இது எதிர்வரும் 30ஆம் திகதி நவம்பரில் நிறைவடைகின்றது. அதன் பின்னர் இந்தியா அதன் தலைமையை ஏற்கவுள்ளது.
இந்நிலையில், ஜி-20 கூட்டத்தின்போது, பல்வேறு பணிக்குழுக்களின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பல்வேறுதுறை சார்ந்த அமர்வுகளில் பங்கெடுத்த அமிதாப் காந்த் இந்தோனேசியாவிற்கு, இந்தியாவின் உறுதியான ஆதரவை உறுதிப்படுத்தினார்.
அத்துடன் ஜி-20 அமைப்பின் அனைத்து, உறுப்பினர்களும் சுகாதாரம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, கூட்டுறவு, அரசிய நலன்களுக்கு அப்பால் சமமான முறையில் கூட்டாக எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சிறு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலாத் துறையின் நிலைபேறான தன்மை, மேம்பாடு, நிதி நிலைமைகளை கையாளல், திறன் மேம்பாடு, நிலையான தொழில்கள் உருவாக்கம் ஆகியவற்றுக்கான தரவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
பேரிடர் அபாயம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து, வளர்ச்சி மற்றும் காலநிலை உரையாடல் இடம்பெறுவதோடு, நியாயமான மாற்றங்களை உறுதி செய்தல் முழுமையாக பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிப்பதில் இந்தியா மேற்கொண்டுள்ள விரைவான முன்னேற்றங்களை எடுத்துரைத்ததோடு, இடம்பெயர்வு பிரச்சினைகளில் சர்வதேச ஈடுபாட்டை மேலும் ஆழமாக்குதல், பாதுகாப்பான இடம்பெயர்வுகளை ஒழுங்குபடுத்தலின் அவசியம் ஆகியவற்றையும் வலியுறுத்தினார்.
அத்துடன், ஜி-20நாடுகளின் அனைத்து அங்கத்துவ பிரதிநிதிகளுடனும் இருதரப்புச் சந்திப்புக்களை நடத்தியவர், உலகப் பிரச்சனைகள் வரவிருக்கும் ஜி-20 தலைவர் பதவியில் இந்தியா முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் அவற்றின் விளைவுகள் குறித்தும் பரஸ்பர உரையாடலில் ஈடுபட்டார்.