புதுடில்லியில் நடைபெற்ற 10ஆவது இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் உரையாடலின் போது, இரு தரப்பினரும் அனைத்து மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களாக, அவை அனைத்து மனித உரிமைகளின் உலகளாவிய தன்மை, பிரிவின்மை, ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகியவற்றை வலியுறுத்துவதாக தெரிவித்தன.
அத்துடன் குறித்த உரையாடல் மனித உரிமைகள் தொடர்பான பரந்த அளவிலான விவாதங்களுக்கு இடமளித்ததோடு, ஏப்ரல் 2021இல் நடந்த இறுதி உரையாடலில் பின்னரான சூழலில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தமது அணுகுமுறைகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை கோடிட்டுக்காட்டியிருந்தன.
இந்த உரையாடலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஐரோப்பாவின் இணைச் செயலர் சந்தீப் சக்ரவர்த்தி மற்றும் இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் உகோ அஸ்டுடோ ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்தவர்களின் உரிமைகள், மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பெண்கள் உரிமைகள், குழந்தைகள் உரிமைகள், மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள், ஜனநாயகம், மனித உரிமைகள் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள், வணிக உரிமைகள், பொது சுகாதாரத்தில் ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி பேரிடர் நிவாரணம் ஆகியன பற்றி விரிவாக கலந்துரையாடின.
மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் சமூகத்தினரின் சுதந்திரம், மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதோடு, அமைதியான ஒன்றுகூடல் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடிய தனித்துவமான, உலகளாவிய, தவிர்க்க முடியாத மற்றும் அடிப்படை மனித உரிமையாக வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிப்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில், மனித உரிமைகள் விவகாரங்களில் அதிக ஈடுபாட்டை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வெளிப்படுத்தின.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், தேசிய மனித உரிமை நிறுவனங்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆற்றும் பங்களிப்பை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா வழிகாட்டுதல் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரஸ்பரம் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம், தனியார்துறை நிலைத்தன்மை குறித்த அதன் சமீபத்திய முயற்சிகளை இந்தியத் தரப்புக்கு தெரிவித்தது. வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் மீதான அதன் முதல் தேசிய செயல்திட்டத்தின் நிலை குறித்து இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை புதுப்பித்தது.
இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வணிகம் மற்றும் மனித உரிமைகள் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும்.
பூகோள ஆய்வறிக்கை பொறிமுறை மற்றும் மனித உரிமைகள் துறையில் சர்வதேச அரங்கில், குறிப்பாக ஐ.நா பொதுச் சபை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் உட்பட பலதரப்புவாதத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் இருவரும் மீண்டும் வலியுறுத்தினர்.
50ஆவது அமர்வின் பக்க நிகழ்வுகளின்போது, பாலின சமத்துவம், நீர் மற்றும் சுகாதாரம் குறித்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதோடு, ஜெனிவாவில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் கூட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் என்று அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.