பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட உக்ரைனிய போர்க் கைதிகள் இறந்ததை விசாரிக்க, ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உக்ரைன் கோரியுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கம், காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் சிறைச்சாலையை அணுக முயற்சிப்பதாகக் கூறியது.
உக்ரைனும் ரஷ்யாவும் இந்த முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டின.
பின்விளைவுகளின் சரிபார்க்கப்படாத ரஷ்ய காணொளி காட்சிகள் சிதைந்த படுக்கைகள் மற்றும் மோசமாக எரிந்த உடல்களைக் காட்டுகிறது.
ரஷ்ய ஆதரவுடைய பிரிவினைவாத டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒலெனிவ்காவில் உள்ள சிறை முகாமில் சரியாக என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சித்திரவதை மற்றும் கொலைக்கான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் இந்த தளம் ரஷ்யாவால் குறிவைக்கப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த சம்பவத்தை ‘வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ரஷ்ய போர்க்குற்றம்’ என்று விபரித்தார்.
அதன் பங்கிற்கு, உக்ரைனிய துல்லியமான ரொக்கெட்டுகளால் முகாம் தாக்கப்பட்டதாக ரஷ்யா கூறியது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் அசோவ் பட்டாலியன் உறுப்பினர்களும் அடங்குவர் என்று கூறப்படுகிறது, அவர்கள் மே மாதம் தெற்கு நகரமான மரியுபோலைப் பாதுகாத்ததற்காக பிடிபட்டனர் மற்றும் ரஷ்யா அவர்களை நவ நாஜிக்கள், போர்க் குற்றவாளிகள் என்று சித்தரிக்கின்றது.