சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கரையோரத்தில் உள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி பல பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு முக்கிய நிறுவனங்களிலும் போதுமான ஆட்களை அனுப்பவும், கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளில் சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்தக் கப்பல் கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளதோடு அரசாங்கத்திற்கு கடும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் சீனாவின் கண்காணிப்பு கப்பல் எரிபொருள் நிரப்புதலுக்காக இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் இதர பொருட்களை எடுத்துக்கொண்டு கப்பல் சுமார் ஒருவாரம் இலங்கையில் நிக்கும் என்றும் இதன்போது எந்தவொரு வேலையையும் குறித்த கப்பல் மேற்கொள்ளாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் முக்கியமான நண்பர்கள் என்பதனால் அனைத்து தரப்புடனும் பேசி இராஜதந்திர ரீதியில் இந்த விடயம் தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதனால் தமது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் ஏதேனும் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே கடலோர கண்காணிப்பை தமிழகம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இலங்கை மக்கள் பலர் தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்துவருகின்ற நிலையில் கடலோர பாதுகாப்பை தமிழக அரசாங்கம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.