வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்பள்ளி பாடசாலைகளின் பெயர்கள் இராணுவத்தினரது தலையீட்டுடன் மாற்றப்படுவதாக நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இதனால் அங்கு கல்வி நிலைமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் இது வெறுக்கத்தக்க விடயம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு முன்பள்ளிகளின் பெயர் இராணுவத்தின் தலையீட்டுடன் மாறப்பட்டுள்ளமையை சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கல்வி திணைக்களங்களின் கீழ் இருந்த முன்பள்ளிகள், சிவில் பாதுகாப்பு தரப்பின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் முன்பள்ளிகளை நிர்வகிப்பது பிறிதொரு இன அடக்கு முறை என்றும் சிறிதரன் குற்றம் சாட்டினார்.
இராணுவத்தினர் நிர்வாகத்தின் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை மாகாண கல்வி திணைக்களங்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் இவ்வாறான செயற்பாட்டை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.