சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள சீஷெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன், இலங்கை தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அனைத்து சவால்களையும் வென்று பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை அடையும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு டென்மார்க் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றமை, அவரின் தலைமைத்துவத் திறன் மீதான நம்பிக்கைக்கு சான்றாக அமைவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளில் மிக நெருக்கமாக பணியாற்ற தான் எதிர்பார்ப்பதாகவும் சிம்பாப்வேயின் ஜனாதிபதி எமர்சன் டம்புட்ஸோ மனன்க்வா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சேர்பியாவின் ஜனாதிபதி எலக்சன்டர் வுசிக், இரு நாடுகளினதும் பாரம்பரிய மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்ந்தும் மேம்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும், அதற்கு தனது தனிப்பட்ட பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள எத்தியோப்பிய ஜனாதிபதி சாஹ்லேவொர்க் ஸேவ்ட், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.