அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தந்து ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டிருக்கும் உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணத்தை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தக்கோரிக்கை விடுத்துள்ளமையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு பகிரங்கமாக அறிவித்தும் உள்ளது.
இதனையடுத்து சீனா இலங்கையின் உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வந்தது.
இவ்வாறான நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், வாங்வென்பின், கப்பல் விடயத்தில் இந்தியா பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அது தனது சொந்த வளர்ச்சி நலன்களின் மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்குமாறும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா, சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்துசமுத்திரக் கடல் பகுதியில் தமது சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வேண்டும் என்றும் எந்த ஒரு நாட்டின் இறைமையையும் பாதிக்கும் வகையில் தாம் செயற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சீனாவும், இலங்கையும் மூன்றாவது நாட்டை இலக்கு வைக்காமல் தமது இரண்டு நாடுகளிடயே பொதுவான விடயங்களை சுதந்திரமாக தெரிவு செய்கின்றன என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், வாங் வென்பின் சுட்டிக்காட்டியுள்ளார்
அவர் சீனாவின் செயற்பாடுகளை நியாயப்படுத்துகின்றார்.
ஆனால் மறுபக்கத்தில் ‘சீனாவின் யுவான் வாங்-5 என்ற கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தினை வந்தடையவுள்ள நிலையில், அங்கு 17ஆம் திகதி வரையில் தரித்து நிற்கவுள்ளது.
இச்சமயத்தில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் சீனாவின் செயற்கைக்கோள்களின் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை நடத்தும்’ என்று இலங்கைக்கான பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சி இணைதளம் தெரிவித்துள்ளது.
ஆகவே, அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வருகை தரும் சீனக்கப்பல் அமைதியாக நின்றுவிட்டுச் செல்லப்போவதில்லை என்பதோடு, சீனாவின் நலன்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகின்றது என்பது வெளிப்படையான வியடமாகும்.
அவ்வாறான நிலையில், இலங்கையின் அயல்நடான இந்தியான தனது தேசிய பாதுகாப்பு விடயத்தில் கரிசனை கொள்வதில் என்ன தவறிருக்கின்றது என்பது முதலாவது விடயமாகும்.
இக்கப்பலின் வருகை தொடர்பில் இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் சில விடயங்களை முன்வைத்துள்ளார்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் பலம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனா தனது ஆய்வுக் கப்பல்கள் மூலமாக இந்தியப் பெருங்கடலில் கடற்படை நடவடிக்கைகளுக்குத் தேவையான தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன,
கடந்த 2019 முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி வரையில், இரண்டு சீன ஆய்வுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக செயற்பட்டிருந்தன.
அந்தமான் ரூ நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே உள்ள ஈஸ்ட் றிட்ஜைச் சுற்றியுள்ள ஒரு பெரிய பகுதியை ஆய்வு செய்தன. 2021 நவம்பரில், சீனா ஆப்பிரிக்கக் கடற்கரையிலும் வடக்கு அரபிக்கடலிலும் ஆய்வுகளை நடத்தியுள்ளது என்று அவர் கூறுகின்றார்.
அதேநேரம் 2019இல் சீனா தனது ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹாங்-6 ஐப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடலில் குறைந்தது 12 தடவைகள் ட்ரோன்களை நிலைநிறுத்தி 12ஆயிரம் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணங்களைச் செய்து தகவல்களைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, கடலின் பாதைகளை வரைபடமாக்குதல், கடலின் உப்புத்தன்மை, கொந்தளிப்பு, ஒட்சிசன் அளவு, போன்ற தரவுகளை சேகரிக்கப்படுகின்றன.
இத்தகைய தரவுகள் வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளைக் கண்டறிந்து கண்காணிக்க உதவுவதுடன் தமது சொந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் பாதுகாப்பான பயணங்களுக்கும் உதவுவதாக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சீனாவின் நவீன வகை ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 அம்பாந்தோட்டையில் ஒரு வாரத்திற்குத் தங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில், அதைச்சுற்றியுள்ள கடலை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அக்கப்பல், மறைமுகமாக அரபிக்கடல், இந்தியாவின் மேற்குக் கடற்கரைகள் மற்றும் மாலைத்தீவுகள் மற்றும் இந்தியாவின் லாக்காடிவ் தீவுகளைச் சுற்றியுள்ள கடல்களில் ஆய்வுப் பணிகளைத் தொடரவுள்ளது என்று குறிப்பிடும் அவர்,இவ்விதமான காரணங்களாலேயே இந்தியா தனது தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம், குறித்த கப்பலின் வருகையானது, மலாக்கா மற்றும் சுந்தா ஜலசந்திக்கு ஊடாகவே இந்தியப் பெருங்கடலுக்குள் இடம்பெறவுள்ளது. இது, இந்தியக் கண்காணிப்பின் கீழாகவும், கட்டுப்பாட்டிலும் இருக்கும் பகுதிகளாகும்.
ஆகவே, சீனாவின் கப்பலின் வருகை தொடர்பில் இந்தியா கரிசனை கொள்வதில் தவறேதும் கிடையாதே.
மேலும், அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா, பாரிய உதவிகளை வழங்கிக்கொண்டுள்ளது. மேலும் வழங்குவதற்கும் திட்டமிட்டுக்கொண்டுள்ளது.
இந்த உதவிகளின் பின்னால் எவ்விதமான நிகழ்ச்சி நிரலும் இல்லை. ஆனால் சீனா, தன்னுடைய பாணில் இலங்கை, இந்தியாவுடன் நெருங்கிவிடும் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பதற்றத்தையும் இலங்கை இந்திய உறவுகளில் விரிசலையும் ஏற்படுத்துவதற்கே முனைகின்றது.
சீனா, குறிப்பிட்டது போல, இலங்கை இறைமையுள்ள நாடாகும். அந்தநாடு சுயாதீனமாகச் சிந்தித்து முடிவுகளை எடுக்கின்றது. அவ்விதமாக எடுக்கப்பட்ட முடிவே, சீனக்கப்பலின் வருகையை தாமதப்படுத்துவதாகும்.
அவ்வாறு, இலங்கை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் இந்தியாவை விமர்சிப்பதில் என்ன நியாயம் உள்ளது. சீனா சினம் கொள்வது எவ்விதம்பொருத்தமானது.
ஆக, சீனா, ஏற்கனவே தனது நியாயமற்ற நடவடிக்கைகளை நியாயமாக்குவதற்காக இந்தியாவை குற்றம்சாட்டுவது முறையற்றது. அவ்விதமான செயற்பாடுகள் அந்நாட்டின் பலவீனத்தினையே வெளிப்படுத்துகின்றது.