லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சேமிப்பு பணத்தை மீள எடுப்பதற்காக 10 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்து வைத்திருந்த ஆயுதம் ஏந்திய நபர் தற்போது, பொதுமக்களால் ஹீரோவாக போற்றப்பட்டுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) ஒரு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கொள்கலனுடன் நகரின் மேற்கில் உள்ள ஹம்ரா வீதிக்கு அருகிலுள்ள பெடரல் வங்கிக் கிளைக்குள் நுழைந்தார்.
தனது தந்தையின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக பணம் கோரிய அவர், பணத்தை தராவிட்டால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டினார்.
அத்துடன் வங்கிக்கு வருகை தந்திருந்த 10 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துக்கொண்டார்.
35,000 அமெரிக்க டொலர்கள் (£29,000) சேமிப்பை முன் கூட்டியே பெறுவதற்கு பேரம்பேசுபவர்கள் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்ட பிறகு, எந்தக் காயமும் இன்றி அமைதியான முறையில் மோதல் முடிவுக்கு வந்தது.
ஏழு மணி நேர போராட்டத்தின் பின்னர் வங்கிக் கிளையிலிருந்து பிணைக் கைதிகளையும் சந்தேக நபர்களையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
சந்தேக நபர் வெளியில் வரும் போது, அவரது நடவடிக்கைகள் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றன. வெளியில் கூடி ஆரவாரத்துடன் கூடிய கூட்டம் ‘நீங்கள் ஒரு ஹீரோ’ என்று கோஷமிட்டனர்.
எனினும், அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்கொள்வாரா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் கூறவில்லை.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், 42 வயதான பாஸ்ஸம் அல்-ஷேக் ஹூசைன் எனவும் அவர் உணவு விநியோக ஓட்டுநர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், லெபனானில் உள்ள வங்கிகள், மக்கள் எவ்வளவு பணத்தை அணுகலாம் என்பதில் கடுமையான விதிகளை வைத்துள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாட்டின் பணமில்லா வங்கிகள் வெளிநாட்டு நாணய சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு கடுமையான வரம்புகளை விதித்துள்ளன, இது மில்லியன் கணக்கான மக்களின் சேமிப்பை கட்டுப்படுத்தியுள்ளது.