ஆக்கிரமிக்கப்பட்ட ஸாபோரிஸியா அணுமின் நிலையத்தின் மீது மேலும் ஷெல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தின் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்தின் மீது 10 தடவைகள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையைப் பற்றி விவாதிக்க அழைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில், அதன் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோசி, இது ஒரு கடுமையான நேரம் என்று எச்சரித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் ஐ.நா. நிபுணர்கள் ஆலையை அவசரமாக பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தன, ஆனால் கடந்த காலத்தில் இதே போன்ற கோரிக்கைகளுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்னதாக, அமெரிக்காவும் ஆலையைச் சுற்றி இராணுவமயமாக்கப்பட்ட மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
இதனிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட ஸாபோரிஸியா அணுமின் நிலையத்தின் ஊழியர்கள் துப்பாக்கி முனையில் ரஷ்ய துருப்புகள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ரஷ்ய துருப்புக்கள் அதை ஒரு இராணுவ தளமாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் தொடக்கத்தில் இருந்து ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான தளத்தை ஆக்கிரமிப்பு படைகள் ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும், இது இன்னும் உக்ரைனிய தொழில்நுட்ப வல்லுநர்களால் இயக்கப்படுகிறது.