நம்பிக்கை இல்லாத மற்றும் சர்வதேச பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத அரசாங்கம் எவ்வாறு பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த கேள்வியை எழுப்பினார்.
மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்த, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
இவ்வாறான கூற்றின் பின்னணியில் உள்ள அர்த்தம் குறித்து கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா, பொருளாதார சீர்திருத்தங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினால் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது என்றார்.
பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதே பொருத்தமான தீர்வு என்றும் ஆகவே உண்மையை வெளிக்கொண்டு வந்து அவர்களின் ஆதரவைப் பெற்று இணைந்து செயற்படுமாறும் ஜனாதிபதியிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.