அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உட்லெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலத்தை புனரமைத்து தருமாறு தெரிவித்து, தோட்ட மக்களால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
1992 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட பலகைகளால் ஆன பாலம் புதுப்பிக்கப்பட்டு, இரும்பினால் ஆன இரண்டரை அடி அகலமும் 30 அடி நீளமும் கொண்ட பாலம் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.
எனினும், கடும் மழையின் போது வெள்ளத்தினால் குறித்த பாலம் மூழ்குவதுடன், மழைக் காலங்களில் பாலத்தை கடக்க முடியாதவாறு பாலம் பழுதடைந்து காணப்படுவதாக பிரதேச வாசிகளால் தெரிவிக்கப்பட்டது.
இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு, மலையக அரசியல்வாதிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எவரும் இதனை புனரமைத்து கொடுக்க முன்வரவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்தே, தங்களின் இந்தப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வொன்றை வழங்குமாறு பிரதேச வாசிகளால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.