நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தாலும் இறுதிப் போட்டியின் வெற்றி அந்த அணிக்கு ஆறுதலை அளித்துள்ளது.
ஜமைக்காவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் பிலிப்ஸ் 41 ஓட்டங்களையும் கோன்வே 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒடியன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் டோமினிக் ட்ரேக்ஸ் மற்றும் ஹெய்டன் வோல்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, புருக்ஸ் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பிரெண்டன் கிங் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பிரெண்டன் கிங்கும் தொடரின் நாயகனாக க்ளேன் பிலிப்ஸ்சும் தெரிவுசெய்யப்பட்டனர்.