காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களினால் குறித்த பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டினை, அவர்களிடமிருந்து அறவிடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
போராட்டம் இடம்பெற்ற பகுதியினை உரிமை கோரி ஒரு தரப்பினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் சட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் காலி முகத்திடல் பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அரச சொத்துக்களை பலவந்தமாக எந்தவொரு தரப்பினரும் கையகப்படுத்த முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு இழப்பீட்டினை பெற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் அமைச்சின் அதிகாரிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான நிலைமையை எதிர்நோக்க தமது அமைச்சின் அதிகாரிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய சேதவிபரங்கள் தொடர்பில் முழுமையான மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.