ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், இதுதொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது.
குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் இணையும் இந்த குழுவில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மாத்திரமின்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய அரசாங்கம் அடுத்த சில தினங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில் இவர்களுக்கான அமைச்சு பதவிகள் பகிரப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொண்டால் அந்த கட்சி நாடாளுமன்றத்தில் சிறிய கட்சியாக மாற்றம் பெரும்.
இதன்காரணமாக தற்போது சஜித் பிரேமதாச வகித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எதிர்க்கட்சியில் பெரும்பான்மை பிரதிநிதிகளை கொண்டிருக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.