தனது 3 வயது குழந்தைக்கு முன்னால் இளம் தாய் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது.
கடந்த 3.07.2022 அன்று 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கணவன் வீட்டில் இல்லாத வேளை அவரது 3 வயது பிள்ளை பார்த்து இருந்த சந்தர்ப்பத்தில் அயலவர் ஒருவரினால் கத்தி மூலம் அச்சுறுத்தபட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குறித்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் சுமார் 1 வயது மற்றும் 3 வயது பெண் குழந்தைகளின் தாய் என்பதுடன் மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது வீட்டில் கணவன் இல்லாத நிலையில் குறித்த பெண் சம்பவ தினமன்று தங்கி இருந்ததுடன் இரவு 7 மணியளவில் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவரினால் 3 வயதான தனது மகள் பார்த்து கொண்டிருந்த வேளை கத்தி மூலம் அச்சுறுத்தபட்டு வலுக்கட்டாயமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளானதாகவும் அபயக்குரல் எழுப்பியும் எவரும் தன்னை காப்பாற்றவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதுடன் தன்னை துஸ்பிரயோகப்படுத்திய நபர் 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதிலும் குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட காரைதீவு பொலிஸ் நிலையம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதியான நடவடிக்கை எடுக்க தவறி உள்ளதுடன் அப்பெண் தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று தஞ்சமடைந்துள்ளார்.
அத்துடன் வலுக்கட்டாயமாக தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரிடம் இருந்து பாதுகாப்பு பெற்று தருவதுடன் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் இளம் பெண் முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைப்பாட்டிற்கமைய காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவினால் சம்பவம் தொடர்பாக விசாரணை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த பெண் அண்மையில் வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றலாகி வாழ்ந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.