நேபாளத்தில் சட்டவிரோத வர்த்தகத்திற்குள் சீன குற்றவியல் வலையமைப்புகள் தங்கள் சிறகுகளை விரித்துள்ளன.
நேபாளத்தில் சீன குற்றவியல் வலையமைப்புக்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தின் விரைவான எழுச்சிக்கு மத்தியில், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் நேபாளத்தில் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது சந்தேகத்திற்கு இடமானவர்களையும் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தின் திலோத்தமா-2 ஜானகிநகர் பகுதியில் அமைந்துள்ள ப்ளு ஸ்கை பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற தொலைத்தொடர்பு நிலையத்தில் அண்மையில் மாவட்ட பொலிஸ் அலுவலகமான ருபாண்டேஹியில் இருந்து வரவழைக்கப்பட்ட காவல்துறையினரால் விசேட சோதனை செய்யப்பட்டது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சீனர்கள் இப்போது நேபாளத்தை சட்டவிரோத வர்த்தகம் மற்றும் மோசடி குற்றங்களுக்கான ஒரு போக்குவரத்து தளமாக மாற்றியுள்ளனர். மேலும், சீனர்களின் குற்ற வலையமைப்புகள் நோபளம் வழியாக வனவிலங்கு கடத்தல்களிலும் ஈடுபடுகின்றன.
குறிப்பாக, காங்கோ, போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து துருக்கி வழியாக நேபாளத்திற்கு கொண்டு வரப்பட்ட 162 கிலோ பாங்கோலின்களை (எறும்புதின்னி) காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் சீனக் குடிமக்களான கியூ ஷிங்ரோங் மற்றும் கியூ லிபாஓ ஆகியோர் காத்மாண்டு விமான நிலையத்தில் பாங்கோலின்களுடன் கைது செய்யப்பட்டனர்.
அதேநேரம், கடல் குதிரை மற்றும் புலித்தோலுடன் தாமேலில் உள்ள ஒரு ஹோட்டலில் மூன்று சீனர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
நேபாளத்திலிருந்தும், நேபாளம் வழியாகவும் யர்சகும்பா, சுனகாரி, புலி எலும்புகள் மற்றும் பல்வேறு மூலிகைகளை கடத்துவதில் சீனர்கள் முன்னணியில் உள்ளனர்.
அதுமட்டுமன்றி நேபாளத்தில் மருத்துவத் துறையில் சீனர்கள் தங்கள் குற்ற வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
நோபளத்தின் மத்திய புலனாய்வுப் பணியகம் நேபாளத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டு வந்த தாமலில் உள்ள அப்பல்லோ இன்டர்நேஷனல் சிகிச்சை நிலையத்தில் வைத்து சீனா கிரேட் வோல் ஹெல்த் சென்டர், சீனா பீப்பிள்ஸ் ஹொஸ்பிடல் மற்றும் சீனா டென்டல் மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றும் 13 மருத்துவர்களை கைது செய்தனர்.
இந்த மருத்துவர்கள் எந்தவிதமான அனுமதிகளும் இன்றி விலையுயர்ந்த மருத்துவ சேவைக் கட்டணங்களைப் பெற்று செயற்பட்டுவந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்திள்ளனர்.
இவர்களின் கைதின் பின்னர் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் இப்போதும் கூட, சில சீனர்கள் நோபளத்தில் இயங்கும் மருத்துவ நிலையங்கள் போல காட்டிக்கொண்டு மருத்துவமனைகளை நடத்திச்செல்லும் செயற்பாடுகளில் இரகசியமாக ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சீனர்களின் செயல்பாடுகள் சட்டவிரோதமான மருத்துவ வர்த்தகத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அதிர்ச்சியில் இருந்த நேரத்தில், சீனர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேபாளத்தின் முக்கிய நிர்வாக அமைப்பான ‘சிங்க தர்பார்’ வாயிலின் முன் போராட்டத்தினை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுநபர்கள் ஒன்றுகூடுவதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் திரண்ட 33 சீன பிரஜைகளை அகற்றுவதற்கான அங்கு வருகை தந்திருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதில் பெருநகர காவல்துறையைச் சேர்ந்த சிங்க தர்பார் அதிகாரி ஹரி பகதூர் பாஸ்நெட் மற்றும் ஒரு பெண் அதிகாரி ஆகியோர் காயமடைந்தனர்.
இதேநேரம், நேபாளத்தின் சங்குவாசபாவின் வடக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபட்டிருந்த 28வயதான சோங் ஜென்ஜியன் என்ற சீனக் குடிமகன், நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைக்கடப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில் கையும்மெய்யுமாகச் சிக்கியதால் கைது செய்யப்பட்டார்.
நேபாள காவல்துறையின் தரவுகளின்படி, சீனர்கள் தங்கம் மற்றும் சிவப்பு சந்தனத்தை கடத்துவதன் மூலம் சட்டவிரோத டொலர் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
அண்மையில், முதல் முறையாக இவ்வாறான சட்ட விரோதமான பரிவர்த்தனை பக்தாபூரில் நடைபெற்றுள்ளது.
அங்கு 40,000 டொலர்களுடன் சீன நாட்டவரான கோவின் லியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் காவல்துறையினர் இந்த விடயம் சம்பந்தமாக அதீத கவனம் செலுத்தி , சீனர்கள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
மேலும், காத்மாண்டுவில் உள்ள சுயம்புவில் இருந்து மூன்று இலட்சம் அமெரிக்க டொலர்களுடன் மூன்று சீனர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடத்தில் மேற்கொண்ட விசாரணையில், நோபளின் டாடோபனி எல்லைக்கு டொலர்களை கடத்தியதற்காக மற்றொரு சீனர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல், நேபாள காவல்துறையின் மனிதக் கடத்தல் புலனாய்வுப் பணியகத்தின் ஆய்வுகளின்படி, நேபாள சிறுமிகளை மணப்பெண் வடிவில் சீன நாட்டவர்கள் கடத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணைகளுக்குப் பின்னரே, சீனர்களால் திருமணம் என்ற பெயரில் நேபாள சிறுமிகள் கடத்தப்படுகின்றனர் என்ற முடிவுக்கு காவல்துறையினர் வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின்படி, காத்மாண்டுவில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் சீன திருமணப் பணியகங்களில் இருந்து பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீன குற்றவியல் வலையமைப்புக்கள் தங்கம், டொலர்கள், வனவிலங்கு பாகங்கள், மூலிகை கடத்தல், இணையவழி ஊருவல், மனிதக்கடத்தல், கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல், இணையவழி மோசடி, சூதாட்டம் மற்றும் சட்டவிரோத மருத்துவ நடைமுறைகள் என்று நேபாளத்தின் அத்தனை பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்த முனைவது இதன்மூலம் உறுதியாகின்றது.
இதனால், காவல்துறையானது, நேபாளத்திலர் பரந்துவிரியும் சீன குற்றவியல் வலையமைப்புக்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் சீனக் குற்றவியல் வலையமைப்புக்கள் களையப்படுமா என்பது தான் கேள்வியாகவுள்ளது.