ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் தன்னால் பங்கேற்க இயலாது என அவர் அறிவித்துள்ளார்.
மேலும், ஜோகோவிச் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட இந்த முறை என்னால் நியூயார்க்குக்கு பயணிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வரும் வெளிநாட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும், தொடரில், பங்கேற்போருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என அமெரிக்க டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்காவில் நுழைவதற்காக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாகிறது.
ஏற்கெனவே இதே கொரோனா தடுப்பூசி விவகாரத்தால், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சால் பங்கேற்க முடியாமல் போனது. பின்னர் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் களம் கண்ட அவர், அதில் காலிறுதியில் நடாலிடம் தோற்றார். பின்னர் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றார்.
ஜோகோவிச் தற்போது 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற இரண்டாவது வீரராக உள்ளார். முதலிடத்தில், 22 பட்டங்களுடன் நடால் உள்ளார்.
இதேவேளை, டென்னிஸ் அரங்கில் பெண்கள் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இரண்டாவது வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இந்த தொடருடன் ஓய்வுப் பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.