முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, தொகுக்கப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.
பொதியிடல் தொடர்பான தீர்மானங்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடாகத் தேவையான பரிசீலனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு கூறியுள்ளது.
வெள்ளை முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 43 ரூபாயாகவும் பழுப்பு நிற முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 45 ரூபாயாகவும் நிர்ணயித்து அண்மையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.
இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வெள்ளை மற்றும் சிவப்பு அல்லது பழுப்பு நிற முட்டைகளின் விலையை தனித்தனியாக 50 ரூபாயாக அதிகரிக்க வர்த்தக அமைச்சர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.