மன்னார் தீவு பகுதியில் இடம் பெற்று வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மன்னாரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு, மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதியம் 12 மணி வரை பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
மேலும், தனியார் போக்குவரத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளினால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கனிய மணல் அகழ்வினால் எதிர் காலத்தில் மன்னார் தீவு பகுதியில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, காற்றாலை மின் உற்பத்தியால் மீனவர்களின் வாழ்வாதாரம் எதிர் காலத்தில் முழுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷமெழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் ஆகிய வற்றிற்கு எதிராக மக்களிடம் கையெழுத்து பெற்று கொள்ளப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.