முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கோட்டாபய ராஜபக்ஷ தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு சென்றிருந்தார்.
அத்துடன், ஜுலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி, ஒகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.
மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து நேற்றிரவு இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
மிரிஹான வீட்டிற்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பல தடவைகள் கோட்டாபய இலங்கைக்கு வருவதற்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. எனினும், பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டிருந்தன.