சீன உரக்கப்பல் தொடர்பான முரண்பாடுகளை, இரு நாடுகளினதும் நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்க்கும் பொறுப்பை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
சேதன பசளை பரிமாற்றம் தொடர்பான விடயங்களில் உரிய வகையில் செயற்பட்டிருக்காத சீனாவின் கிண்டாவே சீவின் பயோடெக் நிறுவனத்தை இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அரசாங்கத்திடம் பரிந்துரைத்திருந்தார்.
பரிந்துரைக்கப்பட்ட விவசாய இரசாயனங்கள் இல்லாத அழிவுகரமான பக்டீரியாவைக் கொண்ட உரங்களைக் கொண்டு இவ்வாறு இலங்கைக்குள் நுழைய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உரம் நாட்டிற்குள் நுழைந்திருந்தால் இலங்கையில் பொருளாதார பெறுமதி உள்ள பயிர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கைக்கான சீன தூதுவருடன் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.