ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஐ.நா.உறுப்பு நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துகொள்வதற்கு கட்சி பிரதிநிதிகளை அனுப்புவதற்கு கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை என அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இருப்பினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகளின் வழிகாட்டலின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் பேரவையின் அமர்விற்கு கட்சியின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் எவரும் அனுப்பப்படாவிட்டாலும் 12ஆம் திகதி அமர்வில் தமது பிரதிநிதிகளாக புலம்பெயர் மக்கள் செயற்படுவார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசு செய்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றம் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்போவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.