அடுத்த வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சி தோல்வி கண்டுள்ளது.
இந்தநிலையிலேயே விரைவில் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், பதவியேற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறு ஏற்கனவே இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
35 முதல் 40 பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
வியாழேந்திரன், அரவிந்தகுமார், சுரேன் ராகவன் ஆகியோர் இராஜாங்க அமைச்சு பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழ் உறுப்பினர்களாவர் என தெரியவருகின்றது.
இராஜாங்க அமைச்சர்களின் நியமனத்தின் பின்னரே, நிலையான அமைச்சரவை நியமனம் இடம்பெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பதவிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இராஜாங்க அமைச்சுக்கென தனியாக நிதி ஒதுக்கப்படாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் தனது அமைச்சரவை அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நேற்று இடம்பெறக்கூடும் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.