உயர் நீதிமன்ற தீர்ப்பில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை கடைப்பிடித்து, சர்வஜன வாக்கெடுப்பை தவிர்த்து அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
22வது திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாக இருப்பதால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டே அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு கடந்த மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22வது திருத்த சட்டமூலமானது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு பதிலாக கொண்டுவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.