நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய பேரவையொன்றை அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தின் சமீபத்திய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு வழிகாட்டுவது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால பொது திட்டங்களில் உடன்பாட்டை எட்டுவது இதன் நோக்கம் ஆகும்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முப்பத்தைந்துக்கு மேற்படாத எம்.பி.க்கள், பிரதமர், அவைத் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேசியப் பேரவை என்ற நாடாளுமன்றக் குழு ஒன்று இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ள பிரேரணை கூறுகிறது.
துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழு, அரசாங்கக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு, பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு, வங்கி மற்றும் நிதிச் சேவைகளுக்கான குழு, வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொது நிதிக்கான குழு ஆகியனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. எந்தவொரு ஆளும் குழுவிலிருந்தும் அறிக்கைகளை கோரும் அதிகாரம் இருக்க வேண்டும்.
குறித்த தேசிய பேரவை பத்து உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், குழுவின் முழு அனுமதியைப் பெறாமல் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாத உறுப்பினர் பதவியை கைவிட்டதாகக் கருதப்படும் என்றும் தீர்மானம் கூறுகிறது.
பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அண்மையில் கூடிய கட்சித் தலைவர்கள் தேசிய பேரவையொன்றை அமைப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து நிறைவேற்ற தீர்மானித்துள்ளனர்.