இந்தியா தனது முதலாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை சேவையில் இணைத்திருக்கின்றது.
கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் கடந்த இரண்டாம் திகதி நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஐ.என்.எஸ்.விக்ராந்த்தை கடற்படையிடத்தில் அர்ப்பணித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி ஆற்றிய உரையாது மிகவும் முக்கியமானது. பல செய்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அவர் தனது உரையில், ‘முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நான் சேவையில் அர்ப்பணிப்பதை இட்டு பெருமிதமடைகின்றேன்.
உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இவ்வளவு பெரிய விமானம் தாங்கி கப்பல்களை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவை புதிய நம்பிக்கையால் நிரப்பியுள்ளது.
விக்ராந்த் போர்க்கப்பல் பெரியது மற்றும் பிரமாண்டமானது, விக்ராந்த் தனித்துவமானது, விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல, 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்திய கடற்படை, அனைத்து பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தொழிலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம் இது. விக்ராந்த் போர்க்கப்பல் நகரும் நகரம். விக்ராந்த் போர்க்கப்பல் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது.
வளர்ச்சி நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது. அத்துடன், பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்புடைய நாடாக மாறுவதற்கான முயற்சிகளுக்கு இது முக்கிய நாள்’ என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்துக்கள் இந்தியாவின் ‘வல்லரசு’ இலக்கை மிகவிரைவில் அடைவதற்கான முழுமையான வாயில்களைத் திறந்துள்ளதோடு, வளர்ச்சிப்பாதையில் தனது உறுதியான பயணத்தில் திடமாக உள்ளது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்பில் இந்தியா கொண்டிருக்கின்ற தீவிரமான கரிசனையையும், ‘அயலுறவுக்கு முன்னுரிமை’ என்ற இலக்கில் ஏனைய நாடுகளின் பாதுகாப்பிலும் விசேட அக்கறை கொண்டிருக்கின்றமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறான நிலையில், விக்ராந் போர்க்கப்பலின் சிறப்பம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது விசேடமாகின்றது.
இந்தக் கப்பலானது இந்திய கடற்படையிடத்தில் சேவையில் உள்ள போர்க் கப்பல்களை விட 7 மடங்கு பெரியதாகும்.
இப்பாரிய கப்பலை அமைக்கும் பணிகள், 2009இல் ஆரம்பமாகியிருந்தன. தசாப்தங்கள் கடந்து முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப்பனிகள் கொரோனா நெருக்கடிகளால் ஏற்பட்ட சவால்களையெல்லாம் கடந்து நவீன வசதிகளுடன் நிறைவுக்கு வந்திருக்கின்றன.
இந்த போர்க்கப்பலை கட்டமைப்பதற்காக பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்தபோர்க்கப்பலின் நீளம் 262 மீற்றர்களாகும்.
அகலம் 62 மீறறர்களாகும். 59 மீற்றர் உயரத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் தொன் எடையைத் தாங்குவதோடு, 7,500 நாட்டிக்கல் மைல்கள் தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது.
இதில், 1,700 வீரர்கள் பயணிக்க முடியும் என்பதோடு கடற்படை வீர,வீராங்கனைகள் தங்குவதற்கு தனி இடவசதியுமுள்ளது.15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன.
இந்த கப்பலில் இருந்து ‘மிக்-29 கே’ போர்விமானங்கள், ‘கமோவ்-31’ ஹெலிகாப்டர்கள், எம்.எச்.-60, ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும், தரையிறக்கவும் முடியும். மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை இந்த போர்க்கப்பலில் உள்ளது.
இந்தக்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்டிகல் மைலாகும். அத்துடன், 1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகி உள்ள இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், மிதக்கும் சிறப்பு மருத்துவமனையும், இடம் பெற்றுள்ளது.
மருத்துவப் பணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஒக்டோபர், கடந்த ஜனவரி, ஜூலை மாதம் என்று மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.
அத்துடன், இன்னொரு சிறப்பம்சமாக புதிய விக்ராந்த் போர்க்கப்பலுக்காக புதிய கொடியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய கொடியில் இருக்கும் சென்.ஜோர்ஜ் கிராஸ் நீக்கப்படுகிறது.
ஐ.என்.எஸ் இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கொடி இனி அனைத்து இந்திய கடற்படைக் கப்பல்களிலும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 1961இல் பிரித்தானியாவிடமிருந்து வாங்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ராந்த் எனப் பெயரிடப்பட்ட இந்த போர் கப்பல் 1971இல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியது.
பின் 1997இல் படையில் இருந்து விலக்கப்பட்டது. 2017இல் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது.
இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபா செலவில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர் கப்பல் 2013இல் வாங்கப்பட்டது. இதுவே இந்தியக் கடற்படையில் உள்ள ஒரேயொரு விமானம் தாங்கி போர் கப்பலாகும்.
இந்நிலையில் தான் விக்ராந் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை உருவாக்கியதன் மூலமாக, இந்தியா, சொந்த நாட்டில் போர்க்கப்பல்களை உருவாக்கும் வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்டவற்றின் பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும், இந்தியாவைச் சுற்றி கண்ணுக்கு தெரியாத வகையில் செயல்படும் அண்டை நாடுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து. இந்திய கடல் எல்லையில் வெற்றி வியூகம் வகுக்க ஐ,என்.எஸ். விக்ராந்த் உதவும் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தாக உள்ளது.