ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு, முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பு ஆலோசகராக இணைந்துக் கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட மஹேல, நேற்று மும்பை இந்தியன்ஸிற்கு சொந்தமான மூன்று அணிகளின் செயற்திறன் மேற்பார்வையாளராக தரம் உயர்த்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் ஆசியக் கிண்ணத்தை வென்று வலுவான வீரர்களை கொண்ட இலங்கை அணியை மேலும் வலுவூட்டுவதற்கு மஹேல ஜயவர்தன அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக செயற்படவுள்ளார். இது இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணிக்கு பலம் சேர்க்கும் விடயமாக பார்க்கப்படுகின்றது.
இன்று அல்லது நாளை ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் 15பேர் கொண்ட விபரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை உபாதையில் இருந்த வேகப்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர உலகக்கிண்ண அணியில் இடம்பிடிப்பார் என அணித்தலைவர் தசுன் சானக உறுதிப்படுத்தியுள்ளார்.
பல்லேகலையில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமின் போது மட்டுமே முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க பந்து வீச்சு ஆலோசகராக செயற்படுவார் எனவும் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியுடன் இணைந்து உலகக்கிண்ணத் தொடருக்காக அவுஸ்ரேலிய அணியுடன் பயணிக்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.