நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று மின்விளக்குகளை அணைத்து மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மத்திய மாகாண மகா சங்க கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த வணக்கத்துக்குரிய கலஹா சிறிசாந்த தேரர், ”விகாரைகளில் மின் கட்டணம் ஐந்தாறு மடங்கு அதிகரித்துள்ளது. எங்களது விகாரையின் மின் கட்டணம் இதுவரை 60,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
வெசாக் போன்ற காலங்களில் ஆலயங்களை இருளில் மூழ்கடிக்கும் சதியா இது என்ற பலமான சந்தேகம் எமக்கு உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையால் இனி வரும் காலங்களில் விகாரைகளில் தீபம் ஏற்ற வேண்டிய அவசியமில்லை.
வரவிருக்கும் பௌர்ணமி நாளில் அனைத்து விகாரைகளிலும் மின்சாரத்தை துண்டித்து, விகாரைகளை இருளில் மூழ்கடித்து, நன்கொடையாளர்களுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆலோசனையை இன்று முன்வைக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.