தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.
ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இன்று முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அது அங்கீகரிக்கப்படவுள்ளது.
தேசிய சபை சபாநாயகர் தலைமையில் உள்ளது. இந்த சபையில், பிரதமர், அவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுத்தல் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால குறைந்தபட்ச திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பொதுவான முன்னுரிமைகளை அமைக்க தேசிய சபை முன்மொழிந்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்ற கூட்டங்கள் இல்லாத நாட்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட நாடாளுமன்றத்திற்கு வருகை தருமாறு கோரும் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதிக்கு வருகைதர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இவ்வாறு உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.