இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேர் இன்று காலை இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில்; தங்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பத்திரமாக மீட்டதாகவும் அகதிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.