இலங்கைக்கு தொடர்ந்தும் இயன்ற உதவிகளை செய்வதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா இனி நிதி உதவி வழங்காது என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு தொடர்ந்து உதவுவதுடன் குறிப்பாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீளும் நிலைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும் என உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இவ்வருடம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இருதரப்பு உதவியின் பெறுமதி 4 பில்லியன் டொலர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, இருதரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு திட்டங்களுக்காக இந்தியா சுமார் 3.5 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உதவுமாறு ஏனைய பங்குதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.