உக்ரைன் இராணுவத்தினரால் அண்மையில் மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் ரஷ்யப் படைகளின் காவலில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் காக்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 7 இலங்கையர்களின் காட்சிகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.
இந்நிலையிலேயே, இந்த 7 இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நட்பு நாடான ரஷ்யாவுடனான உறவுகளை சேதப்படுத்துவதற்கு இந்த விடயம் பயன்படும் என்பதால், இதனை மிகுந்த கவனத்துடனும் அவதானத்துடனும் கையாள வேண்டும் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் இலங்கை ரஷ்ய நட்புறவு சங்கத்தின் செயலாளருமான கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையர்கள் 7 பேரும் வெளிப்படுத்திய உண்மைகளின் அடிப்படையில் ரஷ்யா போர்க்குற்றம் புரிந்ததாக நேரடியாகக் குற்றம்சாட்ட முடியாது என சமன் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.