இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார்.
51வது மனித உரிமைகள் கூட்டத்தொடருடன் இணைந்து இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவை செயலகத்தில் முறைப்படி கையளிக்கப்பட்ட இந்த வரைவு தீர்மானத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.
இந்தத் தீர்மானத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பாதுகாப்பு, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற புதிய தலைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகள் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் இந்நத் தீர்மானம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால முயற்சிகளை அங்கீகரிப்பதுடன், இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் எட்டப்பட்ட பணியாளர் மட்ட உடன்படிக்கையை வரவேற்பதாக அந்தத் தீர்மானம் தெரிவித்துள்ளது.
நல்லிணக்கம் மற்றும் அதன் மக்கள்தொகையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதில் ஒருங்கிணைந்த அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை அந்த்த தீர்மானம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏப்ரல் 2022 முதல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கைதுகள், அத்துடன் அரசாங்க ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை, இறப்பு, காயங்கள், அழிவு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட மனித உரிமை முன்னேற்றங்கள் குறித்து புதிய தீர்மானம் கவலை தெரிவிக்கிறது.
அனைத்து தாக்குதல்கள் மற்றும் பொறுப்புக் கூறப்பட்டவர்கள் மீதும் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் புதிய தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.