அமைச்சுப் பதவிகள் கிடைக்காதமையினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை பதவிகளுக்கான 12 உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பட்டிருந்தது.
பல வாரங்களுக்கு முன்னர் இந்த பெயர் பட்டியல் அனுப்பப்பட்டிருந்த போதிலும், அவர்களில் பலர் இதுவரையில் அமைச்சர்களாக நியமிக்கப்படவில்லை.
அமைச்சரவையில் உள்ள முப்பது அமைச்சர்களில் 18 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பன்னிரண்டு பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
அதற்காக பொதுஜன பெரமுன 12 பேரின் பெயர்களை அனுப்பியுள்ள போதிலும், ஏனைய கட்சிகளும் பல அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டியிருப்பதால் அது 8 ஆகக் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜீவன் தொண்டமான், வஜிர அபேவர்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கும் அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைக்கப் போவதாக அறியப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.