அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கும் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கமவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜி.எல். பீரிஸ் எங்கள் பள்ளியின் இளைய சகோதரர். இந்த நாட்டின் தற்போதைய நிலை குறித்து பேச அவர் என்னை அழைத்தார். இந்த உரையாடல் ஜி.எல்.பீரிஸுடன் மட்டுமே இருந்தது.
நாங்கள் இருவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள். இப்போது நான் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பதால் என்னால் தனியாக செல்ல முடியாது.
மற்றவர்களின் ஆதரவும் தேவை. சந்திரிகாவும் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்குகிறார்” என அவர் மேலும் தெரிவித்தார்.