அமெரிக்க போர்க்கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள அண்மைய நாடான தென்கொரியா, வடகொரியாவின் மேற்குப் பகுதி நகரமான டாய்ச்சானிலிருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக கூறியுள்ளது.
அதிகபட்சமாக 60 கி.மீ. உயரத்தில் 600 கி.மீ. தொலைவுக்கு இந்த ஏவுகணை சென்றதாக, தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக தங்களது வலிமையைக் காண்பிக்கும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இதற்காக அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம்தாங்கிக் கப்பலான ‘ரொனால்ட் ரீகன்’ தென்கொரியாவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ‘வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை சோதனையால் தென்கொரியாவுக்கு வந்துள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், வடகொரியாவின் சட்டவிரோத ஏவுகணைத் திட்டங்களை இந்தச் சோதனை எடுத்துக்காட்டுகிறது’ என இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராணுவ பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்த வாரம் தென்கொரியா செல்ல இருக்கும் நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை முதல்முறையாக
வடகொரியா பரிசோதித்தது. நிகழாண்டு மட்டும் 30க்கு மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது