பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக்ரைனில் போரிடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட அணித்திரட்டல் நடவடிக்கையில் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர், அனைத்து தவறுகளும் சரி செய்யப்படும் என்று கூறினார்.
இராணுவ அனுபவம் இல்லாதவர்கள், மிகவும் வயதானவர்கள் அல்லது விஷேட தேவையுடையோர் அழைக்கப்படுவதாக பல அறிக்கைகள் கூறுகின்றன.
ஜனாதிபதி புடின் செப்டம்பர் 21ஆம் திகதி உக்ரைனில் போரிட மூன்று இலட்சம் பேருக்கு அழைப்பு விடுத்தார். கடந்த வார இந்த அணிதிரட்டல் ஆணை, ஏற்கனவே பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.
மேற்கு மற்றும் உக்ரைனில் உள்ள பல இராணுவ வல்லுநர்கள் புடினின் ரிசர்வ் வீரர்களை அழைக்கும் முடிவு, ரஷ்யா அதன் படையெடுப்பைத் தொடங்கி ஏழு மாதங்களுக்கும் மேலாகியும், உக்ரைனில் உள்ள போர்க்களத்தில் ரஷ்ய துருப்புக்கள் மோசமாக தோல்வியடைந்து வருவதைக் காட்டுகிறது என கூறுகின்றனர்.
அணிதிரட்டல் அறிவிப்பு வெளியானதில் இருந்து, ரஷ்யா முழுவதும் நடந்த போராட்டங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.