இம்மாதம் 15ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரையில் பெரும்போக விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.
விவசாய நடவடிக்கைகளுக்கான உள்ளீடுகளை அரசாங்கம் வழங்கும் வரையில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடுவதில்லையென மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தீர்மானித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு அமைவாக இந்த தீர்மானத்தினை விவசாயிகள் எடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் திணைக்கள தலைவர்களுக்குமான சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய சங்கங்கள்,சம்மேளனங்களின் பிரதிநிதிகள்,கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் கி. ஜெகநாத்,மாவட்ட விவசாய பணிப்பாளர்,நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றதுடன் விவசாய நடவடிக்கை காலத்தினை தெரிவுசெய்தல்,உள்ளீடுகளைப்பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
உள்ளீடுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் கிடைக்கவேண்டும் என்றும் 15ஆம் திகதி விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கமுன்னர் விதைப்புக்கான உள்ளீடுகள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
விதைப்பு நடவடிக்கைகளுக்கான உள்ளீடுகளை அரசாங்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இதன்போது அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.