தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதற்கு எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன் னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார்.
திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களால் முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையினை மத்திய அரசு வெளியிட்டது.
அதில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இடையிலான தூய்மை நகரங்கள் போட்டியில் மொத்தம் 45 நகரங்கள் இடம் பெற்றதாகவும், அதில் மதுரை 45-ஆவது இடத்திலும், சென்னை 44-ஆவது இடத்திலும், கோயம்புத்தூா் 42-ஆவது இடத்திலும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமை உள்ளிட்ட அசுத்தம் குறித்து அளிக்கப்படும் புகாா்கள் மீதான சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலான போட்டியில் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒரு உள்ளாட்சி அமைப்பும் இடம்பெறவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
திமுக அரசின் அலட்சியப் போக்கு காரணமாகவே தமிழ்நாடு இந்த அளவுக்குப் பின்தங்கியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, தூய்மையில் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.