பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.
அமைதியின்மை குறித்த தனது முதல் பொதுக் கருத்துக்களில், அயதுல்லா அலி கமேனி, ஈரானின் பரம எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளால் கலவரங்கள் தூண்டப்பட்டதாக கூறினார்.
ஒரு தசாப்த காலமாக தனது ஆட்சிக்கு எதிர்ப்புகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன, மேலும் பாதுகாப்புப் படைகள் மேலும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறை தீவிரமடைகிறது என்ற அறிக்கைகள் குறித்து தான் கடுமையான கவலை அடைவதாக ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி வட மேற்கிலுள்ள சாகேஸ் நகரை சேர்ந்த 22 வயதான குர்து இன பெண்ணான மாசா அமினி, தெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமுலாக்கும் பொலிஸ்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அமினியின் தலையில் பொலிஸ்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், பொலிஸ்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு பிறகு 3 நாட்கள் கோமா நிலையில் துன்பப்பட்டு, மாசா அமினி, மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் பொலிஸ்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். அங்கு 150க்கும் அதிகமான இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களின் போது இதுவரை 92க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.