பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடி நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொழிலாளர்கள் பெரும் துயரங்களை சந்திப்பதாக தெரிவித்தார்.
மாதாந்த ஊதியத்தையும் சம்பள முற்பணத்தையும் நம்பியே தோட்டத் தொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதாக சுட்டிக்காட்டிய அவர், அதிலும் கூட ஒருசில தொழிலாளர் குடும்பங்கள் பல இன்னல்களை சந்திப்பதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் பெரும்பாலன கம்பனிகள் தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாயை வழங்க தீர்மானித்துள்ளது என்றும் ஓரிரு கம்பனிகள் இந்த முற்பணத்தை வழங்க தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.