குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்தை தொடர்ந்து 50 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாம் அறிந்த வகையில் இந்த தீர்மானம் காரணமாக சம்பந்தப்பட்ட நாடுகளினால் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவேளை, தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுக்கு அது வாய்ப்பாகவும் அமைந்துவிடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அதனூடாக, குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களை நிர்க்கதி நிலைக்கு தள்ளிவிடாமல் அவர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால் இராணுவ வீரர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் எனவும் விமல் வீரவங்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று, குருந்தூர் மலை விகாரை வரலாற்று சிறப்பு மிக்க விகாரை எனவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கில் ஏதாவதொரு பௌத்த விகாரைகள் இருந்தால் அதுதொடர்பில் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.
அதற்கு அப்பால், இந்து போன்ற வேறு சமய தேவஸ்தானங்கள் இருந்தால் அதுதொடர்பில் யாரும் கேள்வி எழுப்புவதில்லை எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஜெனீவா கூட்டத்தொடர் நெருங்கும்போது, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது அல்லது சமய பிரச்சினைகளை காரணம் காட்டி நாடகம் அரங்கேற்றுகிறார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
அவர்களே, அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள்.
குருந்தூர் மலை விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது மிகவும் தவறான விடயமாகும்
திருகோணமலை போன்ற கோவில் பிரச்சினை குறித்து யாராவது கவனம் செலுத்துகின்றனரா எனவும் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.