மன்னார் மாவட்டத்தில் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் உயிலங்குளத்தில் அமைந்துள்ள கட்டுக்கரை குளத்திட்ட விவசாயக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் முதலாவது நீர் விநியோகம் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் இறுதி திகதியாக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கால்நடை பராமரிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அதன் அடிப்படையில் கால் நடைகளை இம்முறை தேத்தாவடி மற்றும் கட்டுக்கரையின் மேல் பகுதி புல்லறுத்தான் கண்டல்-மேய்ச்சல் தரை போன்ற இடங்களில் பட்டி அடைத்து பராமரிக்கும் படி கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விதை நெல், உர மானியம், விவசாயிகளுக்கு காப்புறுதிகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் கால்நடைகளின் தாக்கம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.
அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், மறு உணவுப் பயிர்கள் தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், விவசாய திணைக்கள பணிப்பாளர், மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.