இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் வருட இறுதியில் கூட்டமொன்றை நடத்த ஜப்பான் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் நம்பிக்கையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கமும் இதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சந்திப்பில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் ஏனைய கடன் வழங்கும் நாடுகளும் பங்குவகிக்குமாறு ஜப்பான் கோரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செலுத்த வேண்டிய கடன் தொகையை குறைப்பது, அதற்கான கால அவகாசம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஆதரவளிக்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.