உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகின்றது.
காத்தற்கடவுளான மஹாவிஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் அவதார புருஷராக பூமியில் ஜனனித்ததாக வரலாறு கூறுகின்றது.
துவாபரயுகத்தில் கொடுங்கோலோச்சிய கம்சன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்வதற்காக பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆயர் குடியில் கிருஷ்ணராய் அவதரித்தார்.
பாண்டவர்களின் தோழராய், பார்த்திபனின் சாரதியாய், குருசேத்திரத்தில் மகாபாரதப் போரை வழிநடத்திய கண்ணபிரான் அன்று தர்மத்தை நிலைநாட்டினார்.
வரங்கள் பல பெற்று மக்களை துன்புறுத்திய நரகாசுரனையும் கிருஷ்ண பரமாத்மா சம்ஹாரம் செய்து மக்களுக்கு வாழ்வளித்தார்.
நரகாசுரனுக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் கைகூடியதை நினைவுகூரும் நோக்கில் தீபத்திருநாளன்று இல்லங்களும் கோவில்களும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
இந்தியா, இலங்கை, நேபாளம், மியன்மார், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இதேவேளை, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை நாட்டின் பல பாகங்களிலும் களை கட்டியுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் தலைநகர் கொழும்பிலும் இன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்ததுடன், இன்று காலையிலிருந்து மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
வவுனியாவிலும் மக்கள் தமது துயரங்களை மறந்து கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னார் – திருக்கேதீஸ்வரத்தில் இன்று காலை இடம்பெற்ற தீபாவளி தினத்திற்கான விசேட பூஜைகளில் மக்கள் கலந்து கொண்டு புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
வட மேல் மாகாணத்தின் புத்தளம் – முந்தல் பிரதேசத்திலும் தீபாவளி விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், காலையிலிருந்து மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அவற்றிலும் அதிகளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தீபாவளி களைகட்டியுள்ளது. கோவில்களுக்கு சென்ற மக்கள் தமக்காகவும் தமது சமூகத்திற்காகவும் விசேட பூஜைகளில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பிலும் இதேவிதமாக மக்கள் கோவிலுக்கு சென்று பூஜைகளில் கலந்து கொண்டதுடன், அங்கும் பெருமளவு மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
மலையகத்திலும் மக்கள் தீபாவளி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒளி கண்டகலும் இருள் அரக்கன் போல், உள்ளங்கள் கொண்ட ஆணவமும் அகந்தையும் அகன்று, ஞானமும் கருணையும் ஒளிவீசிட அனைவருக்கும் ஆதவனின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.