இந்தியா ஓர் இரட்டை சகோதரராக, குறிப்பாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்கள் உட்பட எப்பொழுதும், இலங்கைக்கு துணை நிற்குமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், திருகோணமலையில் வைத்து இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தி நம்பிக்கையை மீண்டும் அளித்ததோடு, தெளிவான செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடைய சந்திப்புக்களும், கரிசைனகளும் இந்தியா, தமிழ் பேசும் சமூகங்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கையின் மீதும் எவ்வளவு தூரம் ஆழமான கரிசைனையைக் கொண்டிருக்கின்றது என்பதை அப்பட்மாக வெளிப்படுத்தியுள்ளது.
முதலில், அவர் விஜயம் செய்த இடங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்வுகளை கவனத்தில் கொள்கின்றபோது, விஜயத்தினை ஆரம்பிதவுடன் கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்ததோடு, வறுமைக்கோட்டிற்குள் சிக்கியுள்ள நூறு மாணவர்களுக்கு உதவித்திட்டத்தினை அறிவித்ததோடு, இந்திய புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் வெளிப்படுத்தினார்.
பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை அலகின் நிர்மாணப்பகுதி, இராமகிருஸ்ணமிஷன், காத்தான்குடி உள்ள பதுரியா ஜும்ஆ மசூதி மற்றும் மெத்தை பெரிய பள்ளிவாசல் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ததோடு, மட்டக்களப்பில் 1967 இல் நிறுவப்பட்டிருந்த தேசபிதா மகாத்மா காந்தி சிலைக்கு மலரஞ்சலியும் செலுத்தினார்.
இதன்போது, சமயத்தலைவர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களையும் சந்தித்து சுமூகமான கலந்துரையாடல்களில் பங்கேற்றதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து, திருகோணமலைக்குச் சென்ற அவர், தொன்மைமிகு இந்து ஆலயமான திருக்கோணேஸ்வரத்தில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்கேற்றதோடு, ஆலயத்திற்கு அண்மையிலும் வெகுதூரத்திலும் இருக்கும் பக்தர்களுக்கான யாத்திரை ஸ்தலமாக இந்த ஆலயத்தினை புனருத்தாரணம் செய்வதற்கான கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து திருகோணமலையில் உள்ள லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன வளாகத்தில் மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் பங்கேற்றவர், ‘இலங்கையின் சக்தித் தேவையினை நிவர்த்தி செய்வதிலும் உற்பத்தித்துறையில் அதிகரித்துவரும் சக்தி தேவையினை பூர்த்தி செய்வதிலும் லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் வகிபாகம் பாராட்டுதலுக்குரியது’ என குறிப்பிட்டார்.
அதனையடுத்து மிக முக்கியமாக, கிழக்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜெயந்த குலரத்னே மற்றும் விமானப் படை அக்கடமியின் கட்டளைத் தளபதி எயார் கொமடோர் அசேல ஜயசேகர ஆகியோரைச் சந்தித்தவர்,
இந்தியாவால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட டோனியர் விமானத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை ஆயுதப்படையினருக்கு உறுதுணையாக இருந்துவரும் இந்திய கடற்படையினரின் தொழில்நுட்ப பிரிவினருடனும் சம்பாசனையில் ஈடுபட்டிருந்தார்.
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 400 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவி அடிப்படையிலான நிவாரணப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக ஏற்கனவே 4 பில்லியன் டொலர்கள் வரையில் கடன்களாக வழங்கியுள்ளது.
அந்தக்கடன்களின் கீழ், அத்தியாவசிய உலருணவுப்பொருட்கள், மருந்துவகைகள், விவசாயத்துக்கான உரங்கள் என்று தொன்கணக்கானவை ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் ‘அயலுறவுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு அமைவாக, இலங்கை நெருக்கடிக்குள் சிக்கித்தவித்த வேளையில் இந்தியா எவ்விதமான பிரதிபலன்களையும் எதிர்பாராது முன்வந்து உதவியிருந்தது.
இவ்வாறானதொரு நிலைமையில் தான், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
அவர், இலங்கை வாழ் மக்களின் இருப்புடன் சம்பந்தப்பட்ட கல்வி, சுகாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் அதிகூடிய கரிசனைனை வெளிப்படுத்தியதோடு இந்தியாவினுடைய ஒத்துழைப்புக்களும், ஒத்தாசைகளும் தொடர்ந்தும் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
அதுமட்டுன்றி, கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவினக் குழுமங்களுடனும் பாரபட்சமன்றி உரையாடல்களைச் செய்ததோடு, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் முதற்கட்டமாக வழங்கிவைத்துள்ளார்.
விசேடமாக, இலங்கையின் கரையோரப்பாதுகாப்புக்காக இந்தியா ஏற்கனவே டோனியர் விமானத்தினை கையளித்து அதற்கான பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
இந்நிலையில் உயர்ஸ்தானிகர், அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இலங்கையின் தேசிய பாதுகாப்புடன் கூடுதல் தொடர்புடைய இலங்கையின் கரையோரப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அக்கறையைச் செலுத்தியுள்ளமை விசேடமானதாகும்.
இலங்கையின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் மதித்து, வரலாற்றுப் புகழ்பெற்ற திருகோணஸ்வரத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அந்தக்கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
அதனடிப்படையில், இந்தியா, இலங்கையின் பாண்பாடு, கலாசாரம், மரபுரிமைகளை காப்பதிலும், மேம்படுத்துவதிலும் எவ்வளவு தூரம் ஆர்வத்தினைக் கொண்டிருக்கின்றது என்பதை உயர்ஸ்தானிகர் பிரதிபலித்துள்ளார்.
இலங்கையின் வளங்ளையும், வரலாற்றுத்தொன்மங்களையும், அபகரிப்பதற்கு சில சக்திகள் கங்கணங்கட்டிக்கொண்டிருக்கின்றன.
அந்த சக்திகள் இலங்கையின் நெருக்கடியான நிலைமைகளை பயன்படுத்துவதற்கும் முனைகின்றன.
அவ்வாறான நிலையில், இந்தியா எந்தவொரு எதிர்பார்ப்புக்களும் இல்லாது உதவிகளை வழங்குகின்றது என்றால் இலங்கையின் உற்ற சகோதரன் இந்தியா தானே.
-யே.பெனிற்லஸ்-