பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சுதந்திரத்தின் பின்னர் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இவ்வாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை 7 – 8 சதவீதம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரத்தின் பின்னர் பொருளாதாரம் இவ்வாறு மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் தற்போது ரூபாவும் இல்லை. டொலரும் இல்லை. சுமார் 60 ஆண்டுகளாக உருவாகியுள்ள இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு தகுதிவாய்ந்த எவரும் எமது நாட்டில் அடையாளங் காணப்படவில்லை.
தற்போது லசார்ட் நிறுவனத்திடமே எமது எதிர்கால நற்பெயர் தங்கியுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணாமல் எந்தவொரு வேலைத்திட்டத்திற்காகவும் எம்மால் கடன் பெற முடியாது. இது குறிப்பிட்டவொரு அரசியல்வாதியால் தோற்றம் பெற்ற பிரச்சினை அல்ல.
பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக கடன் பெறப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரையறை காணப்படுகிறது. எனினும் அந்த வரையறையையும் மீறி மேலும் மேலும் கடன் பெறப்பட்டுள்ளது.
தனிநபரொருவருக்கு வருமானத்தை விட செலவுகள் அதிகமாகக் காணப்பட்டால் , அவருக்கு கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும். அந்தக் கடனை மீள செலுத்துவதற்காக அவருக்கு மேலும் கடன் பெற வேண்டியேற்படும்.
இவ்வாறு பெற்ற கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமையில் , ‘என் மரணத்திற்கு நானே காரணம்’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு , தற்கொலை செய்து கொள்வார்.
ஆனால் அரசாங்கத்தினால் அவ்வாறு செய்ய முடியாது. அரசாங்கத்தில் யார் தற்கொலை செய்து கொள்வார்? என்றார்.