இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது.
இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது இந்தியாவை புறக்கணித்து விட்டு அபிவிருத்தி செய்ய முடியாது.
இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை துறைமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருகோணமலையின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையாது, சுதந்தித்தின் பின்னரான வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தற்போது காணப்படுகின்றன.
இவ்வாறான தருணத்தில் ‘அயலுறவுக்கு முன்னுரிமை’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோட்பாட்டின் கீழாக, இந்தியா வழங்கிய உதவிகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன.
அவ்வாறானதொரு நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறு தெரிவித்ததோடு, இந்தியாவுடனான நெருக்கமான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தினையும் பகிர்ந்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகார மட்ட உடன்பாட்டை எட்டியிருந்தாலும், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியுள்ளது.
குறிப்பாக கடன் பெற்றுக்கொண்ட நாடுகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்து கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
விசேடமாக, பரிஸ் கிளப் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.
அத்துடன், இலங்கையின் கடன் வழங்குநர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி இலங்கை இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
ஆனால் சீனா இதுவரையில் மௌனம் கலைக்கவில்லை. அது தனது முன்னைய முடிவான, தனது கடன்களை மீளச் செலுத்துவதற்கான புதிய வட்டியில் மீண்டும் இலங்கைக்கு கடன்வழங்குவதிலேயே கரிசனையாகவுள்ளது.
இதனால், தான், இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கான உறுப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கியபோதும், கடன்தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறானதொரு நிலையில் தான் திருகோணமலை துறைமுகம் மற்றும் நகரம் பற்றிய அபிவிருத்தி விடயத்தினை கையிலெடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
கேந்தரமுக்கியத்துவமான திருணோமலையின் அபவிருத்தியில் இந்தியாவை புறந்தள்ளிவட முடியாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகத்தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்.
குறிப்பாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தியின் போது இந்தியாவை புறந்தள்ளிவிட்டு செயற்பட முடியாது என்ற ஜனாதிபதியின் கருத்துக்கள் அதனை வெளிப்படுத்துபவையாக உள்ளன.
முன்னதாக, திருகோணமலையில் உள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியிருந்தால் இன்று எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
அன்று எண்ணெயத் தாங்கிகளை வழங்கியிருந்தால் இன்று அவை காலியாக இருந்திருக்காது. அவை காலியானதால் இன்று வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளும் காலியாகியுள்ளன.
இதனால் மக்களின் வயிறுகளும் காலியாகியுள்ளன. இனிமேலும் திருகோணமலை அபிவிருத்தியின் போது இந்தியாவை விட்டுவிட்டு பயணிக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தக் கூற்றுக்கள், இந்தியாவின் முதலீட்டின் ஊடாக, திருகோணமலையை கட்டியெழுப்புவதன் மூலமாக சரிந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மீட்டுக் கொள்ளமுடியும் என்பதை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியா நேரடியாக இலங்கைக்கு இவ்வருடத்தில் சுமார் நான்கு, பில்லியன் டொலர்களை கடனாகவும் பொருளாகவும் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்தபோது இந்தியாவின் முதலீடு குறித்து வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை, திருகோணமலைக்குச் சென்றிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், கோபால் பாக்லே, திருகோணேஸ்வர ஆலத்தில் பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டதோடு, அவ்வாலயத்தின் அறங்காவலர் சபையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எதிர்கால அபிவிருத்திக்கு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன், திருகோணமலையில் உள்ள லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் நேரில் விஜயம் செய்திருந்தார்.
குறித்த தாங்கிகள் இலங்கையின் சக்தித் தேவையினை நிவர்த்தி செய்வதிலும் உற்பத்தித்துறையில் அதிகரித்துவரும் சக்தி தேவையினை பூர்த்தி செய்வதிலும் கொண்டிருக்கும் வகிபாகத்தை உயர் ஸ்தானிகர் விரிவாக ஆராய்ந்திருந்தார்.
அத்துடன் லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன நிறுவனத்தால் அண்மையில் நிறுவப்பட்ட இலங்கையின் முதலாவது உராய்வு நீக்கி உற்பத்தி ஆலை மற்றும் இயந்திர ஒயில் கலப்பு நிலையம் ஆகியவற்றையும் உயர் ஸ்தானிகர் பார்வையிட்டதோடு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஒன்றிணைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மேல்நிலை எண்ணெய் தாங்கி தொகுதியின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகர் கரிசனை செலுத்தியுள்ளார்.
இதன்மூலம், திருகோணமலை பிரதேசத்தில் இந்தியா கூடிய சிரத்தை கொண்டு அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்து விட்டது என்பது தான் பொருளாக உள்ளது.
அதேநேரம், இந்தியா, திருகோணமலையில் தனது பங்களிப்பை தொடர்ந்து கொண்டு உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.
திருகோணமலையில் இந்தியா, தனியே, எண்ணெய் தாங்கிகளை மையப்படுத்திச் செயற்படவில்லை.
அதனையும் கடந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றது.
அதன் காரணமாகவே, கிழக்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜெயந்த குலரத்னே மற்றும் விமானப் படை அக்கடமியின் கட்டளைத் தளபதி எயார் கொமடோர் அசேல ஜயசேகர ஆகியோரையும் உயர்ஸ்தானிகர் சந்தித்திருந்தார்.
அந்தச் சந்திப்பின்போது, பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு பங்களிப்பினை வழங்கவும் இலங்கையின் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்குமாக 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியாவால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட டோனியர் விமானத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை ஆயுதப்படையினருக்கு உறுதுணையாக இருந்துவரும் இந்திய கடற்படையினரின் தொழில்நுட்ப பிரிவினருடனும் உயர் ஸ்தானிகர் சம்பாசனையில் ஈடுபட்டு இந்தியாவின் பூரணமாக ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆலோசனைகளை அளித்துள்ளார்.
ஆக, இந்தியா, பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால், பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பித்தக்கது.