மலையகக் கட்சிகள் எமது மக்களின் நலனுக்காக அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட வேண்டியது அவசியம் என என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் “தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையக திறப்புவிழாவில் பங்கேற்குமாறு மலையக அரசியல் கட்சிகளும், தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் மனமுன் வந்து எனக்கு அழைப்பு விடுத்தன. அதன் காரணமாக அந்நிகழ்வில் நான் பங்கேற்றேன்.
மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மலையகத்தின் ஏனைய அரசியல் தரப்புகளுடன் புரிந்துணர்வுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படுவதற்கு நான் தயாராக உள்ளேன்.
அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக் கொண்டு செல்வதுதான் நாகரிகம். நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற உணர்வு எமக்குள் இருக்க வேண்டும். நான் குறித்த நிகழ்வில் பங்கேற்றது தொடர்பில் பலருக்கு பலவித வேறுபட்ட உணர்வுகள் இருக்கலாம். ஆனால் எமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம் என்பதை நாம் மறக்கலாகாது. அதற்கான ஆரம்பமே இதுவாகும்.
நான் அரசியல் களத்தில் பயணிக்க ஆரம்பித்த காலம்தொட்டு எத்துறையைச் சார்ந்த அரசியல், தொழிற்சங்கம், பல்துறையைச் சார்ந்தவர்களுக்கு மதிப்பளித்து அவர்களுடைய அனுபவங்களையும், துறைசார்ந்த நிபுணத்துவத்தையும் மதிப்பளித்து நடந்துக்கொள்வதுதான் அனுகுமுறையாக பார்க்கின்றேன். அந்தவகையில் எதிர்காலத்திலும் இவ்வாறான மூத்த அனுபவமிக்கவர்களுடன் கைகோர்த்து பயணிப்பதே எனது இலக்காகும்.
வெறுப்பையும் எதிர்ப்பையும் வைத்து இனிமேலும் அரசியல் செய்ய முடியாது. அவ்வாறான அரசியல் பிளவு கொண்ட அரசியல் போக்கில் நாம் நீடித்துச் செல்ல முடியாது என்பது எனது குறுகிய கால அரசியல் வாழ்வில் நான் கற்றுக் கொண்ட அனுபவம் ஆகும். அன்பினாலும் நல்லிணக்கப்பாட்டினாலுமே எமது மக்களுக்கான நன்மைகள் சாத்தியப்படும்.
அன்றைய சந்திப்பின் போது மலையக அரசியல் கட்சிகளுக்கிடையே அரசியல் ரீதியாக ஒற்றுமை இல்லாவிட்டாலும் அக்கட்சிகள் அனைத்தும் புரிந்துணர்வோடு செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. அவ்வாறே இ.தொ.காவின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் மலையக மக்களின் நலன் சார்ந்த எல்லா விடயங்களிலும் இணக்கப்பாட்டுடன் பயணிக்க நான் தயாராகவுள்ளேன்.
அதேபோன்று மலையக அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் பட்சத்தில், நாம் முட்டிமோதிக் கொள்ளாமல் ஆரோக்கியமான முறையில் எங்கள் வழியில் பயணிப்போம்.
அத்தோடு நான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை காரியாலய திறப்பு விழா நிகழ்வில் கலந்துக்கொண்டமையானது கட்சி பேதமின்றி அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பையும், நல்லிணகத்தையும் வெளிப்படுத்துகின்றது.
ஆகவே இளைஞர்களாகிய நீங்கள் இவ்விடயத்தை மக்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு நல்லெண்ணத்துடன் எமது மக்கள் மத்தியில் கொண்டு செல்வீர்கள் என நம்புகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.