பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்வதில் அதிகப்படியான ஊழல் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அது உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளது.
ஐ.நா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு தரப்பினரும், வெள்ள நிவாரணத்துக்காக நிதியை விடுவித்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய முடியாததால், தற்போது அத்தரப்பினர் கவலையடைந்துள்ளனர்.
இதுதொடர்பில் குறிப்பிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் ‘பாகிஸ்தானின் ஊழல் நிலைமைகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
இதேநேரம், அரசாங்கங்கள், நிவாரண அரசு சாரா நிறுவனங்கள், ஐ.நா பொதுச்செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், பாகிஸ்தான் வெள்ளத்திற்கான மனிதாபிமான உதவிகளில் மீண்டும் மீண்டும் ஊழல்கள் நடப்பது குறித்து கவலை கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில், 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்தனர். தற்போதும் பாகிஸ்தானின் நிலைமை அவ்வாறே உள்ளது.
அந்நாட்டின், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பழங்குடியினப் பகுதிகளில் ஊழல் ஆழமாக வேரூன்றி உள்ளது.
இதனால் குறித்த இரண்டு மாகாணங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஊழல் விடயத்தில் பாகிஸ்தானை ஒரே வருடத்தில் 24 புள்ளிகள் குறைத்தது. இதனால் தான் அந்நாட்டின் வெள்ள நிவாரண ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பாரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது உயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் தகவல்களின் படி, 1,700 இறப்புகளும், 12,800 க்கும் மேற்பட்ட காயங்களையும் பதிவு செய்துள்ளது. சிந்து (747), பலுசிஸ்தான் (325), மற்றும் கைபர் பக்துன்க்வா (307) ஆகிய இடங்களில் அதிகளவான இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதனைவிடவும், அங்கு 2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 7.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் சுமார் 598,000 பேர் முகாம்களில் வாழ்கின்றனர்.
அத்துடன், 25,100 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இடம்பெயர்ந்த மக்களை நடத்துவதற்கு தற்போது 7,000க்கும் அதிகமான பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.